காவல்துறையில் 6140 பேருக்கு வாய்ப்பு!

காவல்துறையில் சேர விருப்பமா?

காலம் காலமாகச் சின்னக்குழந்தைகளிடம் நாம் தவறாமல் கேட்கும் ஒரு கேள்வி “நீ பெரிய ஆளாகி என்னவாகப் போகிறாய்..?” என்பதுதான். அப்படிக் கேட்கும்போது பல பேருடைய பதில் ‘போலீஸ் வேலைக்குப் போவேன்’ என்பதாகத்தான் இருக்கும். காரணம், காக்கிச் சீருடைக்கு உள்ள கம்பீரம் அது. குழந்தைகள் மட்டுமல்ல, திறமை மிக்க பல இளைஞர்களின் கனவு வேலையாக இருப்பது போலீஸ் வேலைதான். அப்படிப்பட்ட கனவு நனவாகும் தருணம் வந்துவிட்டது. சீருடைப் பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6140 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலிப் பணியிடங்கள்:

மொத்தம் உள்ள 6140 காலிப் பணியிடங்களில் மாவட்ட, மாநகர ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்புத் துறைக் காவலர்கள் பணியிடங்களும் அடங்கும். இந்த 6140 காலிப் பணியிடங்களில் 1707 இடங்கள் பெண்களுக்கானவை. திருநங்கைகள் தங்களை ஆண் விண்ணப்பதாரராகவோ அல்லது பெண் விண்ணப்பதாரராகவோ பதிவு செய்துகொள்ளலாம்.

திருநங்கைகள் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிட்டால் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்யும் திருநங்கைகள் பெண் விண்ணப்பதாரர்களாக கருதப்படுவார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களுக்குப் பொருந்தும்.

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். (அப்படித் தமிழைப் பாடாமாக எடுத்துப் படிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். வேலை கிடைத்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தமிழ்த் தேர்வில் இரண்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றால் போதும்) பத்தாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக 12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 1.7.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். அதிகப்பட்சம் பொதுப் பிரிவினருக்கு 24 வயது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 26 வயது. ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவினருக்கு 29 வயது. முன்னாள் ராணுவத்தினருக்கு 45 வயது. அனைத்துப் பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது 35.

உடல் தகுதி:

பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் 167 செ.மீ. உயரம் இருந்தால் போதுமானது. அனைத்துப் பிரிவினருக்கும் மார்பளவு 81 செ.மீ. இருக்க வேண்டும். மூச்சை உள்வாங்கிய நிலையில் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் என்றால் உடல் தகுதி விதிமுறை கிடையாது. பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் 159 செ.மீ. உயரமும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் ஆகியோர் 157 செ.மீ. உயரம் இருந்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமான ரூ.130 நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். தனியாக செலான் பிரின்ட் அவுட் எடுத்து அஞ்சல் அலுவலகம் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.1.2018
தேர்வு செய்யும் முறை:

மூன்று கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தில் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 50 மதிப்பெண்களுக்குப் பொதுஅறிவுப் பகுதியில் இருந்தும், 30 மதிப்பெண்களுக்குக் காவல் துறை உளவியல் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும். 80 கேள்விகளுமே ‘அப்ஜெக்டிவ் டைப்’வகையில் இருக்கும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் 28, இருந்தபோதும், காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் 1:5 என்ற விகிதத்தில் இரண்டாவது கட்ட உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எனவே, எழுத்துத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்களுக்கு இலக்கு வைத்துச் செயல்படுவது நலம்.

உடல் தகுதித் தேர்வு 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆண் விண்ணப்பதாரர்களில் 1500 மீட்டர் ஓட்டத்தினை 7 நிமிடங்களில் முடிப்பவர்கள் மட்டுமே அடுத்தகட்ட உடல்திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களில் 400 மீட்டர் ஓட்டத்தினை 2 நிமிடம் 30 விநாடிகளில் முடிப்பவர்கள் அடுத்தகட்ட உடல் திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உடல்திறன் போட்டிகளில் ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர்( அல்லது ) 400 மீட்டர் ஓட்டம் ஆகியன நடத்தப்படும். இப்போட்டிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு ‘ஸ்டார்’வாங்க வேண்டும். (‘ஸ்டார்’பெறுவது என்பது விண்ணப்பதாரர்களின் செயல்பாடுகளை வைத்து வழங்கப்படும்) இது தவிர, என்.சி.சி., என்.எஸ்.எஸ். சான்றிதழ்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள் சிறப்பு மதிப்பெண்களாக வழங்கப்படும்.

தேர்வுமுறை:

நிறைவாக எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவை மொத்தமாகக் கணக்கிடப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்போது கவனிக்கவேண்டியவை:

இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது தெளிவாகவும், சரியாகவும் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். மிக முக்கியமாகக் கேட்கப்பட்டிருக்கும் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினர் சான்று, விளையாட்டு, தடகளப் போட்டிச் சான்றிதழ்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். சான்றிதழ்கள், திருநங்கையாக இருந்தால் அதற்கான சான்றிதழ் என அனைத்தையும் இணையத்தில் விண்ணப்பத்துடன் அப்லோட் செய்ய வேண்டும். எந்த ஒரு சான்றிதழையும் பின்னால் தனியாக அனுப்பக்கூடாது.

எப்படித் தயார் செய்வது?

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு இரண்டுக்கும் ஒருசேரத் தயார் ஆக வேண்டும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் பணித்தேர்வு வரை பயன்படுவதால் எழுத்துத் தேர்வுக்கு அதிக கவனம் எடுத்துப் படிக்க வேண்டும். ஓட்டப்பயிற்சி, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்ற பயிற்சிகளை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும்.

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்வது எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும். இது தவிர, நடப்பு நிகழ்வுகள், விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படித்துக்கொள்ள வேண்டும்.

காவல் உளவியல் பிரிவு எளிமையாகவே இருக்கும். இப்பகுதிக்கு முப்பது மதிப்பெண்கள். முந்தைய வருட வினாத்தாள்களைப் படித்தாலே போதுமானது இப்பகுதியில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். தேர்வுக்கு இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளி இருப்பதால் உடல் தகுதியை நிச்சயமாக மேம்படுத்திக்கொள்ளமுடியும். விண்ணப்பம் அனுப்புவதில் இருந்து தேர்வு எழுதுவது வரை அனைத்திலும் கவனமாக இருங்கள்.

 

Spread the love
  •  
  •  
  •  
  •